மொபைல் காரணமாக ஒரே தலைவலி எனப் பலர் அலுத்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. தற்போது ஒரு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அதற்கும் தீர்வு அளித்துவருகிறது. பிராங்க் ரோஸ் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் உதவியால் தேவையான மருந்துகளை வீட்டிற்கு வரவழைத்துக்கொள்ள முடியும். நோயாளிகள் மருந்தைத் தேடி வெளியில் அலையத் தேவையில்லை. கொல்கத்தா நகரில் நோயாளிகளுக்கு இந்த அப்ளிகேஷன் உதவிவருகிறது.
இமாமி குழுமத்தைச் சேர்ந்த இமாமி பிராங்க் ரோஸ் லிமிடெட் என்னும் நிறுவனம் இந்த அப்ளிகேஷனை உருவாக்கி யுள்ளது. பிராங்க் ரோஸ் (Frank Ross) என்பது 108 ஆண்டுப் பழமை கொண்ட மருத்துவ நிறுவனம். இதற்கு மேற்கு வங்காளம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 99 தனி மருந்துக்கடைகள் உள்ளன.
பிராங்க் ரோஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் உதவியால் இருபத்து நான்கு மணி நேரமும் தேவையான மருந்துகளை ஆர்டர் செய்து கொள்ள முடிகிறது. கொல்கத்தா நகரத்தின் எந்த மூலையிலிருந்து மருந்துகளை ஆர்டர் செய்தாலும் ஆர்டர் செய்த நான்கு மணி நேரத்திற்குள் மருந்துகள் வீட்டைத் தேடி வந்துவிடுகின்றன. ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பம் கொண்ட எந்த மொபைல் போனிலும் இந்த அப்ளிகேஷனைப் பதிவிறக்கிக்கொள்ள முடியும்.
பிராங்க் ரோஸ் நிறுவனம் நோயாளிகளுக்கு உதவும் வகையில் தமது திட்டத்தை விரிவுபடுத்த உள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனை தரவும், மருத்துவரின் ஆலோசனை தொடர்பான நினைவூட்டலை வழங்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்நிறுவனத்தில் தலைமை அதிகாரி கௌதம் ஜாட்டியா தெரிவித்துள்ளார். கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் உடல்நலப் பிரச்சினைகளை நன்கு கவனித்துக் கொள்ளலாம் என்பது ஆரோக்கியமான விஷயம் தானே.
No comments:
Post a Comment